பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், ஆகாயத் தலங்களைக் கடந்த இதழ்களில் கண்டோம். இப்போது மிக முக்கியமான தலமான வாயு தலத்தைப் பார்க்கப் போகிறோம்.
பல்வேறுவிதமான தானியங்கி இயந்திரங் களை நவீன உலகம் கண்டுபிடித்திருக்கிறது. அவை நமக்குப் பலவகைகளிலும் பயன்பட்டுக் கொண்டும், பயனைத் தந்துகொண்டும் இருக்கின்றன. இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், தானியங்கி இயந்திரங் களை இயக்க ஒரு விசை தேவைப்படுகிறது. அந்த விசையை இயக்கினால்தான் அதிலிருந்து வெளிப்படும் சக்தி இயந்திரம் இயங்கக் காரணமாக அமைகிறது. ஆக, இது எப்படி தானியங்கி இயந்திரமாகும்? ஆனால் ஒரு மனிதன் தூங்க வேண்டுமென்றால் எந்தவொரு விசையையும் (switch off) இயக்க வேண்டிய தில்லை. அதைப்போன்று மனிதன் தூங்கி விழித் தெழும்போது அவனை எழுப்புவதற்கு எந்த வொரு விசையும் (on switch) இயக்கப்படுவது இல்லை. ஆகவே உண்மையாகவே உலகில் ஒரு தானியங்கி இயந்திரம் இருக்கிறதென்றால் அது இறைவனால் உருவாக்கப்பட்ட உடலெனும் இயந்திரமே. இந்த உடல் இயந்திரத்திற்கு மிக முக்கியமானது இயற்கை சக்தியெனும் இறைசக்தி உருவாக்கியுள்ள பஞ்சபூத சக்திகளில் ஒன்றான காற்றுதான். பிராண வாயு மிக முக்கிய மானது. உடல்வேறு; உயிர்வேறு. எனவே உயிரை இயக்கும் வாயு பகவானை வணங்குவோம்.
பிராணன் எனப்படும் வாயு எவ்வளவு உன்னதமானது என்பதை உலகிற்கு உணர்த்தும் தலமாக காளஹஸ்தி விளங்குகிறது. இது முன்னர் ஒருங்கிணைந்த தமிழ்நாட்டில்தான் இருந்தது. தற்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், ஸ்ரீபுரம், மும்முடிச்சோழபுரம் எனும் இரு மலைச் சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. வடக்கில் துர்க்காமலை, தெற்கே காளத்திமலை, கிழக்கே குமரன் மலை என மூன்று பக்கத்திலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேற்கே "சொர்ணமுகி' என்றழைக்கப்படும் "பொன்முகலி' ஆறு ஓடுகிறது.
இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் "வாயு லிங்கம்' என்றழைக்கப்படுகிறது. இக்கோவில் "அநிலக்கோவில்' என்றும், "வாயு ஸ்தலம்' என்றும் அழைக்கப்படுகிறது. அநிலம், கால் என்பதெலாம் வாயு, காற்று என்பதைக் குறிக்கும் சொற்களாகும்.
"ஸ்ரீ' எனும் சிலந்திப் பூச்சியும், "காளன்' என்ற பாம்பும், "அத்தி' என்னும் யானையும் சிவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்திற்கு ஸ்ரீகாளத்தி எனும் திருத்தலப் பெயர் உண்டாயிற்று.
முன்பொரு சமயம் தேவலோகத்தில் விஸ்வகர்மாவின் மகன் ஊர்னநபன் என்பவன் பிரம்மாவின் கோபத்திற்கு ஆளாகி ஸ்ரீ எனும் சிலந்திப் பூச்சியாக பூமியில் அவதரித்தான்.
அந்த சிலந்தி அங்கிருந்த வில்வ மரத்தில் வசித்து வந்தது. ஒருநாள் சிவனை தரிசிக்க வந்த சிவனடியார் கொண்டுவந்த வில்வ இலையுடன் சேர்த்து இந்த சிலந்தியும் பூக்கூடையில் சிக்கிக் கொண்டது. சிவபக்தர் முகலி ஆற்றில் நீராடி வில்வத்தின்மீது ஆற்றுநீரைத் தெளித்தார். அந்த நீர் சிலந்திமீது பட்டவுடன் அதற்கு தனது பூர்வ ஜென்மம் நினைவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு அந்த சிலந்தியானது முகலி ஆற்றில் நீராடி தினசரி சிவபெருமானை வழிபட்டுவந்தது. சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு வலையைப் பின்னி, இலை, தழைகளைப் பந்தலைப் போன்று போட்டு இறைவன்மீது வெயில் படாவண்ணம் சிவனை தரிசித்து வழிபட்டுவந்தது. ஒருநாள் சிலந்தி அமைத்த வலைப்பந்தல் தீப்பிடித்து எரிந்தது. துடித்துப்போன சிலந்தி அந்த நெருப்பிலேயே விழுந்து தன் உயிரைவிட முயற்சித்தது.
அப்போது அங்கே சிவ பெருமான் திருக்காட்சித் தந்து சிலந்திப்பூச்சியை முக்தியடையும்படி செய்தார்.
சிவபெருமானின் ஆபரணங்களில் ஒன்றான "காளன்' எனும் பாம்பு தன் மனைவியைத் தேடி பாதாளலோகம் சென்றது. இந்த சமயத்தில் தேவர்களை சந்திக்கப் புறப்பட்ட சிவபெருமான் தனது ஆபரணத்தைத் தேடினார்.
தக்கசமயத்தில் காளன் அங்கில்லாதது கண்டு, அதனை பூவுலகில் சென்று வசிக்குமாறு சபித்துவிட்டார். காளனும் இத்திருத்தலத்திற்கு வந்து தினமும் பொன்முகலி ஆற்றில் நீராடி தனது மாணிக்கக் கற்களைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்து வந்தது.
இந்த நிலையில், சிவலோகத்தில் பார்வதி தேவிக்கு "அத்தி' என்ற யானை பணிவிடை செய்து வந்தது. ஒருநாள் இறைவியின் கோபத்திற்கு ஆளாகி சாபம் பெற்று பூலோகம் சென்றது. அந்த யானை பொன்முகலி ஆற்றில் நீராடி, ஆற்று நீரால் சிவபெருமானை அபிஷேகம்செய்து, வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனைசெய்து வழிபட்டு வந்தது. இவ்வாறு இறைவனை வழிபட்டுவந்த காளனும் யானையும் திடீரென ஒருநாள் சண்டையிட்டுக் கொண்டு ஒன்றையொன்று கடுமையாகத் தாக்கிக் கொண்டன. முடிவில் யானையும், காளனும் உயிர் துறந்தன. கருணையே வடிவான எம்பெருமான் அங்கு தோன்றி காளன் எனும் பாம்புக்கும், அத்தி எனும் யானைக்கும் மோட்ச மளித்து தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இதுபோலவே முன்பொரு சமயம் இங்குள்ள வனத்தில் அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறவேண்டி சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வந்தான். அந்த சமயத்தில் சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் சென்று, அர்ச்சுனனிடம் அம்பெய்வது பற்றி விவாதித்தார். அர்ச்சுனனோ வந்தவர் இறைவன் என்று அறியாமல் அவரைப் பார்த்து பரிகாசம்செய்து, "உமக்கு சரியாக அம்புவிடவே தெரியாது; அதுவும் சாத்திர முறைப்படி அம்பு விடத் தெரியாது' என்று தாழ்த்திப் பேசினான். இருவருக்கும் விவாதம் முற்றி, அக்கணம் இருவரும் ஒரு பன்றியை ஒரே நேரத்தில் அம்பெய்து கொன்றனர். இப்போது "பன்றியை நான்தான் கொன்றேன்' என்று அர்ச்சுனனும், "இல்லை யில்லை; நான்தான் கொன்றேன்' என்று வேடன் உருவில் இருந்த சிவபெருமானும் கடுமையாக வாதிட்டனர். இறுதியாக சிவபெருமான் தன் சுய உருவத்தில் வெளிப்பட, அர்ச்சுனன் இறைவனின் திருவடி களில் சாஷ்டாங்கமாக விழுந்து, இறைவனிடம் வாதிட்டதிற்காகவும், தன் தவத்தைப் பாதியில் நிறுத்தியதற்காகவும் தன்னை மன்னித்தருள உள்ளம்உருகி வேண்டினான். இறைவனும் தான் திருவிளையாடல் புரிந்ததாகக்கூறி, பாசுபதாஸ்திரத்தை வழங்கி அருள்பாலித் தார். இப்படி பல்வேறு வரலாறுகளுக்குச் சொந்தமானதே காளஹஸ்தி தலமாகும்.
இந்தியத் திருநாட்டின் மிகவும் அற்புதம் வாய்ந்த ஒரே வாயுத்தலம் காளஹஸ்தியாகும். இத்தலம் திருக்காளத்தி, அகண்ட வில்வ ராண்யம், பாஸ்கர ஸ்தலம், கஜாரண்யம், தென் கயிலாயம் என்று வேறு பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ராகு- கேது இங்கே இறைவனை வழிபட்டதால் ராகு- கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பக்தியில் சிறந்த கண்ணப்ப நாயனாருக்கு இறைவன் கண் வழங்கி காட்சியளித்த தலமும் இதுவே.
கர்ப்பக்கிரகத்தில் மூலவர் வாயுலிங்கத்திற்கு எதிரே இரண்டு தீபங்கள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும். ஈசன் வாயு உருவில் உள்ளார் என்பதன் அடையாளமாக இந்த தீபங்களின் சுடர்கள் காற்றில் அசைந் தாடிக்கொண்டிருக்கும். இந்த தலமானது காலையில் நடை திறக்கப்பட்டால் மதியம் நடை சாற்றப்படாமல் திறந்தே இருக்கும். அர்த்த ஜாமப்பூஜை கிடையாது. இங்குள்ள சக்கர லிங் கம் மிக உன்னதமானது.
சுவாமிக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசத்திலேயே நவகிரகங்கள் உள்ளதால் நவகிரகத்திற்கென்று தனிச்சந்நிதி கிடையாது. சனீஸ்வரர் மட்டும் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். இங்கே ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம். எம்பெருமான் லிங்கத் திருமேனியாக, சுயம்புவாக வீற்றிருக்கிறார்.
அம்பாள் ஞானப் பூங்கோதை, ஞானப் பிரசுனாம்பிகை எனும் திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள். விபூதிப் பிரசாதம் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் சங்கின்மூலம் வழங்கப்படுகிறது.
பூமிக்கடியில் அகத்தியர் பிரதிஷ்டைசெய்து வழிபட்ட பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், நக்கீரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். எல்லா கோவில்களிலும் வலப்புறமாகவே சுற்றிவருவோம். ஆனால் இங்கே இடப்புறமாக சுற்றிவரவேண்டும். நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு- கேது, ஜோதிடரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பிரபஞ்சத்தின் சுற்றுவட்டப் பாதையில் இடமிருந்து வலமாகவே சுற்றிவருகின்றன. மற்ற ஏழு கோள்களும் வலமிருந்து இடமாகச் சுற்றிவருகின்றன.
சிவலிங்கத்தின்மீது அணிவிக்கப்பட்டிருக்கும் கவசத்தில் நவகிரகங்களும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. லிங்கத் திருமேனியின் அடிப்பாகத்தில் சிலந்தியும், மத்தியில் யானையும், மேலே ஐந்து தலை நாகமும் உருவமாகக் காணப்படுகிறது. அருகில் "ஆதிபராசக்தி' திருமேனியும் இருக்கிறது.
இங்கு தல விருட்சம் கல்லால மரமாகும். இது வியாழனுக்குரிய தலமாகவும் போற்றப் படுகிறது. சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலின் நுழைவு வாயில் "பிட்சாலா காளி கோபுர வாசல்' என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளும், அற்புதங்களும் அமையப்பெற்ற இந்த தலத்தில் வழிபடுவது மகோன்னதமான செயலாகும். ஏனென்றால் சரியை, கிரியை, யோகம் இம்மூன்றில், யோகமார்க்கத்தில் பிராணாயாமப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிராணனுக்கு முக்கியத்துவம் பெற்ற இத்தலம் வந்து காளஹஸ்தீஸ்வரரை வணங்கினால் மனமானது செம்மையாகி மனோபலமும், மனோ வேகமும் அதிகரிக்கும்.
பிராணனைப் பற்றி (வாயு) அவ்வையார்-
"அங்குலியால் மூடி முறையால் இரேசிக்கில்
பொங்குமாம் பூரகத்தின் உள்'
என்கிறார். விரலால் நாசித்துவாரத்தை மூடி, முறையாக மூச்சுப்பயிற்சி செய்தால் நமது இதயத் தாமரை இன்பத்தால் விரியும் என்பதே அவ்வைக் கூற்று.
வாயு பகவானான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரனை தரிசித்து, மூச்சுப் பயிற்சியெனும் பிராணா யாமப் பயிற்சியில் ஈடுபட்டு பிராணனை சீராக்கி வாழ்க்கையை நேராக்க ஒருமுறையேனும் ஸ்ரீகாளஹஸ்தி சென்று அன்பெனும் அருளை அள்ளிவருவோம்.